நெருக்கடிக் கால நிவாரணச் சேமிப்பு பற்றி கல்வெட்டில் உள்ள குறிப்புகள்…

நெருக்கடி நிலைமையைச் சமாளிக்க இன்று ஒவ்வொரு நாட்டிலும் நிதி சேகரிக்கப்படுகின்றது. முதலமைச்சர் நிதி, பிரதம மந்திரி நிவாரண நிதி போன்ற பெயர்களில் நிதிகள் வசூலிக்கப்படுகின்றன.

இன்று சேமிப்புப் பற்றித் தீவிரமாக விளம்பரப்படுத்தப்படுகின்றது. சேமிப்பு எக்காலத்திற்கும் இன்றியமையாத ஒன்றாகும். பொ.பி 13-ஆம் நூற்றாண்டில் நெருக்கடிக் கால நிலைமையைச் சமாளிக்க வேண்டித் தானியம் சேகரித்து வைக்கப்பட்டதை பின்வரும் ஒரு அரிய கல்வெட்டால் நாம் அறிகின்றோம்.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

பொ.பி 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆண்டவர் இவர் பாண்டிய மன்னர்களுள் மிகவும் சிறந்தவர். “எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்” என்றும், “கோச்சடையபன்மரான திரிபுவனச் சக்கரவத்திகள்” என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பெருமானல்லூரில் உள்ள உத்தமேச்சுரசுவாமி கோயில் அர்த்த மண்டபத்தின் தெற்குச்சுவரில் உள்ள கல்வெட்டு இவரின் 8ம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது, இக்கல்வெட்டு பெருமானல்லூர் ஊர்மக்கள் ஊர்ச்சபையிடம் நெருக்கடிக்கால நிவாரணத்திற்காகச் செலுத்திய நெல்லைப் பற்றிக் கூறுகின்றது.

கல்வெட்டுச் செய்தி

நல்லூர் என்கிற “அமரடியங்கரச் சதுர்வேதி மங்கலத்துச் சபை” நெருக்கடிக் கால நிலைமையைச் சமாளிக்க ஆண்டு தோறும் இரண்டு தவணையாக, ஐப்பசி — கார்த்திகை மாதத்தில் அறுவடையாகும் கார் நெல்லில் 25 கலமும், சித்திரை மாதத்தில் அறுவடையாகும் பாசனம் நெல்லில் 25 கலமும்,

ஒத்தனூர் என்கின்ற “பெரும்பழனத்து ஊர்ச்சபைக்கு” செலுத்துவதாக எழுதிக் கொடுத்ததைக் கல்வெட்டு குறிக்கின்றது. கொங்கு நாடு “வீரசோழ வளநாடு” என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒத்தனூரான பெரும்பழனத்தம் வடபரிசார நாட்டைச் சார்ந்ததாக குறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு நலிவு உண்டாகும் காலத்தில் அவற்றைச் சமாளிக்கக் கிராம மக்கள் முன்னெச்சரிக்கையாக ஊர்ச்சபையாரிடம் நெல் கொடுத்துச் சேமித்து வைத்ததைக் குறிக்கின்றது. சேமிப்பு என்பது புதிதன்று. அது பன்னெடுங் காலமாக மக்களிடம் இருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிகின்றோம்.

கொங்கு நாட்டு மக்கள் என்றும் திட்டமிட்டு முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவார்கள் என்பதற்கு இக்கல்வெட்டு ஒரு சான்றாக அமைகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஊராடு கால்’ என்னும் அளவு எவ்வளவு என்பது விளங்கவில்லை. பல அளவுகள் மக்களிடம் இருந்ததை இதனால் அறிகின்றோம்.

--

--

தஞ்சை ஆ.மாதவன்

Archaeologist | PhD Research Scholar | Researcher in Prehistoric Archaeology | Lover of Anthropology, Astrobiology, Paleontology | Data Scientist