மங்கையர் வணங்கும் மயில் பண்டிகை…

--

இன்றைய நாகரிகத்தின் தாக்குதலினால் நம்முடைய பண்டையப் பண்பாடுகளும் சிறப்புகளும் அதிகமாக அழிந்து விடாமல், இன்றைய தினம் தமிழகத்தில் எஞ்சி உள்ள பகுதிகளில் தருமபுரி மாவட்டம் ஒன்றாகும்.

அம்மாவட்ட மகளிர்களால் கொண்டாடப்பட்டு சிறுகச் சிறுகச் செல்வாக்கிழந்து வரும் ஓர் அரிய பண்டிகை. இப்பண்டிகை உழவர் திருநாளை உவகையுடன் தைமாதம் கொண்டாடி முடித்துஉடன் நடக்கும். தை மாதம் ஆறாம் தேதி இரவே இப்பண்டிகை ஆரம்பித்துவிடும். அன்று இரவே பெண்கள் அனைவரும் விரதம் இருக்கத் தொடங்கிடுவர்.

தை ஏழாம் தேதி காலை மகளிர் தங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்தி குளித்து முடித்து மயில் பண்டிகையினை துவக்கி விடுவர். இத்துவக்கத்தில் ஊரில் உள்ள அனைத்துப் பெண்களும் ஓர் இடத்தில் கூடி மயிலை வணங்கத் துவங்குவர்.

அவர்கள் எப்படி எப்படி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஓர் அழகான நாட்டுப்புறப் பாடலாகப் பாடி வணங்குவர். இப்படி அவர்களுக்கு கடுமையான விரதங்கள் விதிக்கப்படுகிறது. பின் ஒவ்வோர் வீட்டிலும் மணக்கும் சமையல் துவங்கும். ஒவ்வொரு வீட்டிலும் இருபத்தோரு வகையான காய்கள் சமையல் செய்யப்படும்.

அன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் யார் தோட்டத்தில் காய்கள் இருந்தாலும் யாரையும் கேட்காமல் பறித்துக் கொள்ளலாம் என்பது இன்றளவும் வழக்கில் உள்ள ஓர் நிகழ்ச்சி ஆகும். சமையல் வேலை முடிந்த உடன் அனைத்துப் பெண்களும் ஓர் இடத்தில் கூடி ஓர் வெள்ளைச் சுவற்றில் மயில்களை வண்ணத்தில் வரைவர்.

சில ஊர்களில் வரைந்து வைக்கப்பட்டுள்ள வண்ணத் திரைச் சீலைகளைத் தொங்கவிடவும் செய்கின்றனர். இந்நிகழ்ச்சி முடிந்த உடன் கட்டு உடைப்பு அல்லது பண்டிகையின் இறுதி நிகழ்ச்சிகள் துவங்கும். ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கப்பட்ட விதவிதமான காய்கறிகளுடன் சித்திரம் எழுதப்பட்ட இடத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் எனத் தனியோரப் படையல்கள் போடப்படும். படையல் போடுதல் முடிந்த உடன் கட்டு உடைப்புப் பாடல் பாடப்படும். பாடிப் பாடி கட்டு உடைக்கப்படும். அப்பாடல்கள் வருமாறு;

அதன் பின் ஒவ்வொரு வீட்டின் படையலில் இருந்தும் சிறிது சோறு எடுத்து ஒரு படையல் உருண்டை ஆக்கி “மயிலுக்கு படையல்” ஒரு வீட்டின் கூரையில் வைக்கப்படுகிறது. இப்படையலை உண்பதற்காக மயில் ஏழு நாட்கள் உண்ணா நோன்பு இருக்குமாம்.

மயிலுக்குப் படையல் வைத்த பின் மகளிர் ஏழைகளுக்கு அன்னமிட்ட பின் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் உண்டு மகிழ்வர். இப்பண்டிகையை முழுக்க முழுக்கப் பெண்களே செய்வர். ஒரு பெண் கட்டுப் போடப்படும் இடைக்காலத்தில் ஏதாவது மேற்சொன்ன பொருளில் ஒன்றைச் சாப்பிட்டாலும் மயில் பண்டிகையில் கலந்து கொள்வதில் இருந்து நீக்கப்படுவாள். ஒரு பெண்ணோ அல்லது அவள் குடும்பத்தைச் சேர்ந்த யாரோ மயிலுக்குத் துன்பம் விளைவித்ததாகவோ அல்லது மயில் மாமிசம் உண்டதாகவோ தெரிய வந்தால் அவரும் அக்குடும்ப மும் அக்குடும்பத்தின் வழிவருபவர்களும் மயில் பண்டிகையில் இருந்து விலக்கப்படுவார்கள்.

ஒரு வேளை மயில் பண்டிகை செய்யாத குடும்பத்தில் இருந்து மயில் பண்டிகை செய்யும் குடும்பத்தில் ஒரு பெண் மனைவியாக வருவாளானால், அவள் நாக்கிலும் கைகளிலும் கற்பூர தீபம் ஏற்றப்பட்டு அவளைப் புனிதப்படுத்தி மயில் பண்டிகையில் சேர்த்துக் கொள்வர்.

அதேபோல் மயில் பண்டிகை செய்யும் ஓர் குடும்பத்தில் பிறந்த பெண் மயில் பண்டிகை இல்லாத குடும்பத்தில் மண முடிக்கப்படுவாளானால்; அவள் மயில் பண்டிகைச் செய்யும் தகுதியையே இழந்து விடுவாள்! இவ்வாறு மயில் பண்டிகையைச் செய்வதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்துப் பெண்டிர் இன்றும் “கொல்லாமை நோன்பு” முதலியவற்றை எவ்வாறு கடுமையாகக் கடைபிடித்து வருகின்றனர் என்பதற்கு இது ஓர் சான்றாகும், அதே நேரத்தில் சிறுகச் சிறுக இப்பண்டிகை முக்கியத்துவத்தை நாளுக்கு நாள் இழந்து வருகின்றது என்பதும் வருந்தத்தக்க ஒன்றாகும்!

--

--

தஞ்சை ஆ.மாதவன்

Archaeologist | PhD Research Scholar | Researcher in Prehistoric Archaeology | Lover of Anthropology, Astrobiology, Paleontology | Data Scientist