மன்னர்கள் இறந்தால்…

--

சங்ககாலத்தில், மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள், இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப் பற்றி சங்க இலக்கியங்கள் மற்றும் மேனாட்டார்க் குறிப்புகள் மூலம் ஆய்கிறது இந்த நீள் பதிவு…

க) நோயில் இறந்தால்

மன்னர்கள் போரில் புண்பட்டு இறப்பதையே பெரும் பேறாகக் கருதினர். போரில் இறக்காது வீரக்கழலினையுடைய அரசர்கள் நோயின் பக்கத்தான் இறந்தால் வாளாற் படாத குற்றம் அவர்களிடம் இருந்து நீங்க வேண்டி அறத்தை விரும்பிய கோட்பாட்டையுடைய நான்கு வேதத்தையுடைய பிராமணர்கள் தருப்பைப் புல்லைப் பரப்பி அதன் மீது பிணத்தைக் கிடத்தி வாளால் வெட்டிப் புதைத்தனர் (புறம்: 93). இன்று இந்த வழக்கத்திற்குப் பதிலாகப் பிணத்தை வைக்கோலில் கிடத்தி, கைகால்களை ஒடித்துப் புதைக்கிறார்கள். இந்தப் பணியைத் தற்போது வெட்டியானே செய்கிறார்.

உ) பாடை

பாடையைக் “கால்கழி கட்டில்” என அக்காலத்தில் வழங்கி வந்தனர் (புறம்: 286). இறந்தவர்களை இப்பாடையில் கிடத்தி மிக வெண்மையான ஆடையைக் கொண்டு போர்த்தி விடுவார்கள் என்பதை ஒளவையார் (புறம்: 286) குறிக்கிறார். இதை தூவெள்ளறுவை போர்த்தல் எனப் புறம்: 291-ஆம் பாடல் சுட்டும்.

௩) பறைகொட்டுதல்

சாவில் “பண்டு தொட்டுப் பறை கொட்டும்” மரபு இருந்ததென்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுப்படுத்துகின்றன. பெருந்தொகை 710-ஆம் பாடல் இதை “பூசன் மயக்கம்” என்று குறிக்கிறது. “இரவலர் வம்மினென விசைத்த துடி” எனத் தகடூர் யாத்திரை பாடல் சுட்டுகிறது.

௪) சாப்பண் பாடுதல்

சிறுவர்களும், துடியர்களும் பிணத்தைச் சுற்றி வந்து பறை கொட்டி சாப்பண்ணைப் பாடினர் என்பதை புறம்: 291 சுட்டும். கனல் முழங்கி விளரிப்பண் கண்ணினார் பாணர் எனப் புறப்பொருள் வெண்பாமாலை மேற்கோள் பாடல் சுட்டுவதால் அன்றே விளரிப்பண்ணில் பாட்டிசைத்தனர் எனத் தெரிகிறது.

௫) அழகு பார்த்தனர்

இறந்த மன்னனின் பிணத்திற்குப் பொன்னும் மணியும் அணிவித்து இறுதியாக அழகு பார்த்திருக்கிறார்கள். மணிமருள் மாலையையும், ஒற்றைவட மாலையையும் ஒரு அரசனுக்கு சூட்டியதாகப் புறம் 291-ஆம் பாடல் காட்டுகிறது.

௬) மார்பில் அறைந்து கொள்ளுதல்

இக்காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்தால் பெண்கள் மார்பில் அறைந்து கொண்டு ஒப்பாரி வைப்பதைக் காண்கிறோம். அரசன் இறந்தஞான்று மகளிர் மாரடித்துக்கொண்டனர் என்பதை புறம்: 237- ஆம் பாடல் சுட்டும்.

கைகளில் அணிந்திருந்த வளையல்கள் உடைந்து வாழைப் பூ போல் சிதறி விழும்படியாக மார்பில் அறைந்து கொண்டனர். அரசனின் பிணத்தைக் குளிப்பாட்டிப் பாடையில் (வெள்ளில்) வைத்துப் பின் சுடுகாட்டிற்கோ அல்லது இடுகாட்டிற்கோ எடுத்துச் சென்றனர் (புறம்: 380).

௭) அடக்கம் செய்தல்

பண்டுதொட்டு அரசனுடைய பிணத்தைச் சுடுதலும், தாழியில் கவிப்பதும், கழுகுகளுக்கு உணவாகப் பிணத்தை ஆல நீழலில் போட்டு வருவதும் மரபாக இருந்து வந்துள்ளது. (புறம்: 278, 238, 256).

௮) பெருங்காடு

சுடுகாடும், இடுகாடும் பெரும்பாலும் ஊரின் ஒதுக்குப் புறத்திலேயே அமைந்திருந்தன. இக்காட்டை பெருங்காடு (புறம்:383) தனித்தலை பெருங்காடு, தனி இடத்தை உடைய புறக்காடு (புறம்: 250) என சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன.

பிணத்தை இட்டுப் புதைக்கப்பட்ட தாழியினது குவிந்த புறத்தே கழுகுடன், பொதுவல், அண்டங்காக்கை, கோட்டான் முதலியன தாம் விரும்பியபடி சுற்றித் திரியும் என்பதைப் புறப் பாடல்கள் காட்டுகின்றன.

௯) கைப்பலி

அரசனின் பிணத்தைச் சுடக் குறவனே விறகை வெட்டி வருகிறான். (புறம்: 231) சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லப் பட்ட பிணத்தைத் தர்பைப் புல்லில் கிடத்திக் கள்ளையும் பருக்கை உணவையும் புலையன் படைக்கிறான். (புறம்:380)

இதை “வெள்ளினிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத்திட்ட சில்லவிழ் வல்சி புலையன் ஏவ” என்னும் அடிகளால் உணரலாம்.

இதையே “உப்பிலிப் புழுக்கல் காட்டுப் புலைமகனு குப்ப வேகக் கைப்பலியுண்டு” என்று சீவக சிந்தாமணியடிகளும் (2994) தெளிவுபடுத்துகின்றன.

௰) பிண்டச் சோறு

இறந்துபட்ட அரசன் சொர்க்கம் புகுதல் வேண்டி அன்புக் குரிய மனைவி வீட்டை மெழுகிப் பிண்டச் சோற்றைப் படைக்கிறாள் (புறம்: 234). பொதுவாகச் சங்க காலத்தில் இறந்துபட்ட அண்மகனின் உயிர் சொர்க்கம் புகுதல் வேண்டித் தம் மக்களே பிண்டச் சோற்றை வழங்கினர். (புறம்:9)

--

--

தஞ்சை ஆ.மாதவன்

Archaeologist | PhD Research Scholar | Researcher in Prehistoric Archaeology | Lover of Anthropology, Astrobiology, Paleontology | Data Scientist