வாள் மண்ணுதல்

தொல்காப்பியம் புறத்திணையியலில் “குடையும் வாளும் நாள் கோள் அன்றி” எனத் தொடங்குகிற சூத்திரத்தில் “வென்றவாளின் மண்ணு” என்று ஒரு துறை கூறப்படுகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்,
“இருபெரு வேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கொற்ற வாளினைக் கொற்றவை மேல் நிறுத்தி நீராட்டுதல்.. “
- என்று எழுதுகிறார்.
வாள் மண்ணுதலுக்கு வாண் மங்கலம் என்றும் பெயர் கூறுவர். வாள் மண்ணுதலாகிய வாண் மங்கலத்துக்குச் சாசனச் சான்று கிடைத்திருக்கிறது.
இந்தச் சாசனம் இராஷ்டிரகூட அரசன் கன்னர தேவன் (மூன்றாம் கிருஷ்ணன் ) காலத்தில் பொ.பி 949-50 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தில் மந்தியா தாலுகாவில் ஆதகூர் என்னும் ஊரில் இந்தச் சாசனம் இருக்கிறது.
“கங்கவாடி தொண்ணூற்றாறாயிரம்” நாட்டை அரசாண்டவனாகிய பூதுகன் என்னும் சிற்றரசன், கன்னர தேவனுக்குக் கீழ்ப்பட்டவன். பூதுகனிடத்தில் மணலோன் என்னும் ஒரு சேனைத் தலைவன் இருந்தான். அக்காலத்தில் கன்னர தேவனாகிய இராஷ்டிரகூட அரசனுக்கும், இராஜாதித்ய சோழனுக்கும் போர் நடந்தது.
இந்தப் போரிலே கன்னர தேவன் பக்கத்தில் பூதுகனும் அவனுடைய சேனைத் தலைவனாகிய மணலோனும் போர்க்களஞ் சென்று போர் செய்தார்கள். சோழன் வெற்றிபெறும் நிலையில் இருந்தான். அப்போது பூதுகனின் சேனைத் தலைவனான மணலேரன் கள்ளத்தனமாகப் போர் செய்து சோழனைக் கொன்றுவிட்டான். ஆகவே வெற்றி கன்னர தேவனுக்காயிற்று.
இந்த வெற்றிக்காக மகிழ்ச்சியடைந்த கன்னர தேவன் பூதுகனுக்குப் பல ஊர்களைத் தானமாகக் கொடுத்துச் சிறப்புச் செய்தான். பூதுகன், இப்போரின் வெற்றிக்குக் காரணமாயிருந்த தன்னுடைய வீரனாகிய மணலேரனுக்கு ஆதுகூர் பன்னிரண்டையும், பெள்வொள நாட்டில் காதியூரையும் தானமாகக் கொடுத்தான்.
இச்செய்தியைக் கூறுகிற சாசனம் “வாள் கழுவிக் கொடுத்தான்” என்று கூறுகிறது. இந்தக் கன்னடச் சாசனத்தின் இப்பகுதி வாசகம்: இறுதியில் பாள், கச்சு, கொட்டம் என எழுதப்பட்டுள்ளது.
பொருள்: பாள், பாளு - வாள். கச்சு , கர்ச்சு, கழ்ச்சு - கழுவு, பாள் கச்சு கொட்டம் - வாள் கழுவிக் கொடுத்தான்.

வெற்றிவாளை, வெற்றிக் கடவுளாகிய கொற்றவை (துர்க்கை) மேல் இரத்தக்கறை போகக் கழுவும் வழக்கம் இன்னொரு சாசனத்திலும் கூறப்படுகின்றது. சேர நாட்டில் இரவி வேந்தன் (வீரரவி கேரளவர்மன் திருவடி) என்னும் அரசன் காலத்தில் பின்வரும் இச்சாசனம் செய்யுளாக பின்வருமாறு எழுதப் பட்டிருக்கிறது.

இது இப்போது கன்னியாகுமரி மாவட்டம் “வாள் விச்சகோட்டம்” என்று பெயருள்ள ஊரில் உள்ள பகவதி (கொற்றவை) கோவிலில் இருக்கிறது. வாள்விச்சகோட்டம் என்று தவறாக வழங்கப்படுகிற இப்பெயரின் சரியான பெயர் “வாள் வைத்த கோட்டம்” என்பது.
